ஈரோடு, அக்.17: ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தீபா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தீபாவிற்கு, சின்னு என்பவருடன் கள்ளக்காதல் இருப்பதாக தெரிகிறது. இதனால், தீபாவை பழனிசாமி கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி, தனது இரு குழந்தைகளுடன் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற தீபா, பின்னர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் வீட்டில் தேடியும் தீபா மற்றும் குழந்தைகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோன்று, கவுந்தப்பாடி அடுத்த ரங்கன்காட்டூரைச் சேர்ந்தவர் தனீஸ்வரன். இவரது மனைவி சௌந்தர்யா (20). தனீஸ்வரனுக்கும், சௌந்தர்யாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், அவர்களுக்கிடையே கடந்த 11ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சௌந்தர்யா, வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தனீஸ்வரன் அளித்த புகாரின் பேரில், கவுந்தப்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.