சத்தியமங்கலம், செப். 17: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி சின்னசாலட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாளம்மா (50). கணவரை இழந்த இவர், விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 11ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சமையல் வேலைக்கு சென்று விட்டு 13ம் தேதி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்த நிலையில், பீரோவில் வைத்திருந்த இரண்டு பவுன் தங்க செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெருமாளம்மா கடம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி (31) என்பவர் பெருமாளம்மா வீட்டில் புகுந்து நகை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்த போலீசார் வேலுச்சாமி மீது வழக்குப்பதிந்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.