ஈரோடு,ஆக.15: அந்தியூர் அடுத்த சென்னம்பட்டி கீழ் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கவுரி சங்கர் (25). இவர், அந்தியூரை சேர்ந்த 10ம் வகுப்பு படித்த, 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி 8-7-2021 அன்று கடத்தி சென்று திருமணம் செய்தார். திருமணத்துக்கு முன்பாகவே பலமுறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீசார்,கடத்தல்,குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கவுரி சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த கவுரி சங்கர், நீதிமன்ற விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் இருந்தார். நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவ்வழக்கு நேற்று ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி சொர்ண குமார் விசாரித்து கவுரி சங்கருக்கு 20 ஆண்டு தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.