கோபி,செப்.13: கோபி அருகே லாரி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த வழக்கில் லாரி டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 12,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுவடவள்ளியை சேர்ந்தவர் மோகன்குமார் (35). வாழை இலை வெட்டும் தொழிலாளி. மோகன்குமார் மற்றும் 18 தொழிலாளர்கள், சத்தி அருகே உள்ள கோட்டு வீரம்பாளையத்தை சேர்ந்த தங்கவேல் மகன் தேவராஜ் (45) என்பவரது லாரியில் சென்று கொண்டிருந்தனர்.அத்தாணியில.
வாழை இலை வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்த லாரி பங்களாபுதூர் அருகே உள்ள காளியூர் பிரிவு முனியப்பம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மோகன்குமார் உட்பட 17 பேரும் காயமடைந்த நிலையில், மோகன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் தேவராஜை கைது செய்து கோபி ஜே.எம்.1 ல் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் தாயுமானவர் லாரி டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 12,000 ரூபாய் அபராதம் விதித்தார்.