ஈரோடு, நவ.12: திருப்பூர் மாவட்டம் பெரிய ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (75). இவர், கடந்த 9ம் தேதி சின்ன ஒட்டர்பாளையத்தில் ஆடு, எருமைகளை மேய்க்க சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு வராததால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் தேடி சென்றனர். அப்போது, அங்கிருந்த காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே நடராஜனின் கைத்தடி இருந்தது.
இது குறித்து தகவலறிந்து சென்ற நம்பியூர் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது, கிணற்றில் நடராஜன் சடலமாக கிடந்தார். பின்னர், வரப்பாளையம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வயது மூப்பின் காரணமாக தவறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என தெரியவந்தது. இது குறித்து நடராஜனின் மனைவி பூங்கொடி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
