ஈரோடு, நவ.12: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். உதவி தலைவர் ராஜு முன்னிலை வகித்தார். இதில், தமிழ்நாடு அரசு சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு 1,500ம், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.2,000மும் மாதாந்திர உதவித்தொகை வழங்கி வருகிறது.
ஆனால், அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் சாதாரண ஊனமுற்றோருக்கு ரூ.6,000மும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.10,000மும், உதவியாளர் தேவைப்படுவோருக்கு ரூ.15,000மும் உதவித் தொகையாக நீண்ட காலமாக வழங்கி வருகிறது. உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் வேகமாக உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு நமது மாநிலத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அண்டை மாநிலங்களைப் போல உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதரத்துல்லா கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு துறை அலுவலருக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனைத்தொடர்ந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 56 பெண்கள் 60 ஆண்கள் என 116 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
