ஈரோடு, செப்.10: ஈரோட்டில் இருந்து சித்தோடு வரை, சாலையோரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற
வேண்டும் என ஆணையர் அர்பித் ஜெயின் அறிவுறுத்தியிருந்தார்.
மேலும், பேனர்கள் வைக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அதன் பேரில், ஈரோடு முதல் சித்தோடு நால்ரோடு வரை, சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த, பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.
குறிப்பாக, அரசியல் பிரமுகர்கள், ரியல் எஸ்டேட், விளம்பர பேனர்கள், திருவிழாக்கள் பேனர்கள் என 100க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. மாநகராட்சி நிர்வாகத்தின் உரிய அனுமதி பெற்று, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத இடங்களில் பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.