ஈரோடு, நவ. 7: ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறாக ஏர்ஹாரனை ஒலிக்க செய்த 6 தனியார் பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். ஈரோடு பஸ் ஸ்டாண்டில் தினசரி 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சில தனியார் பஸ்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்தை ஏற்படுத்தும் விதமாக ஏர் ஹாரன்களை ஒலிக்க செய்கின்றனர்.குறிப்பாக, ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஏர்ஹாரன்களை ஒலிக்க செய்கின்றனர்.
பொதுமக்கள் காதுகளை செவிடாக்கும் விதமாகவும், அதிக ஒலி எழுப்பும் வகையிலும், விபத்துக்கு காரணமாக உள்ள ஏர் ஹாரன்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் எஸ்.ஐ. சண்முகமூர்த்தி உள்ளிட்ட போலீசார் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, 6 தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பஸ்களில் இருந்து ஏர்ஹாரன்களை அகற்றினர். அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பஸ்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இச்சோதனை இன்றும் தொடரும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
