ஈரோடு, நவ. 5: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராதாமணி தலைமை வகித்தார். இதில், அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வின்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும்.
பணி ஓய்வுக்கு பின் அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.9,000 வழங்க வேண்டும். மே மாதம் விடுமுறையை ஒரு மாத காலம் வழங்க வேண்டும். 1993ம் ஆண்டில் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை அரசு கருத்தில் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திரளான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
