ஈரோடு,அக்.4: ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று மது விற்பனையில் ஈடுபட்டதாக 4 பெண்கள் உட்பட 47 பேரை போலீசார் கைது செய்து,1,168 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியான நேற்று முன்தினம் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.
இதனை பயன்படுத்தி சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு எஸ்பி சுஜாதா போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் நேற்று தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
இதில், மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக நேற்று ஒரே நாளில் 4 பெண்கள் உட்பட 47 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 1,168 மதுபாட்டில்களையும், 4 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.