Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்து அமைச்சர் துவக்கி வைத்தார்

ஈரோடு, ஜூன் 7: ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில், அமைச்சர் முத்துசாமி தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர்(ஈஸ்வரன்) கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கடந்த 31ம் தேதி விருஷப யாகமும், நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து கோயிலின் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

இதைத்தொடா்ந்து, தினந்தோறும் காலை 8.30 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் யாக சாலை பூஜை நடக்கிறது. நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜை, திக் பலி, சூர்னோத்ஸவம், சந்திரசேகரர் அபிஷேக ஆரானையும், சிபிகையில் மாட வீதி வலம் வருதலும், மாலையில் சோமாஸ்கந்தர் கஜ வாகனத்தில் ரத வீதி வருதலும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில் வருணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். முன்னதாக, தேரோட்டத்தை தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, எம்எல்ஏ சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதையடுத்து, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, வழிபட்டனர்.

கோயிலில் இருந்து தொடங்கிய தேரோட்டம் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, காமராஜ் வீதி வழியாக சென்றது. இந்த தேருடன் வருணாம்பிகை அம்பாள், விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளின் சப்பரங்களும் உடன் சென்றது. பின்னர், தேர் மீண்டும் மாலை 4 மணிக்கு கோயில் நிலை வந்தடைந்தது. முன்னதாக தேரோட்டத்திற்கு இடையூறாக இருந்த ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை பெரியமாரியம்மன் கோயில் அருகே சாலையின் நடுவே உள்ள பெரியளவிலான வழிகாட்டி பலகையை போலீசார் அகற்றினர். மேலும், தேர் வரும் வழிகளில் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல், மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, நாளை(8ம் தேதி) மாலை 5.30 மணிக்கு சிவகாமி அம்பிகா சமேத நடராஜர் ஸ்ரீ மஞ்சத்திலும், சிவகாமி அம்மன் கற்பக விருட்சத்திலும் ரத வீதி வரும் நிகழ்வும், மகா நீராஞ்சனமும் நடக்கிறது. நாளைய மறுதினம்(9ம் தேதி) காலை 6.30 மணிக்கு வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர காபலீஸ்வரருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி விழாவும, மூல மூர்த்திக்கு யாக கட கும்பாபிஷேகமும், மாலை 5 மணிக்கு வாருணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. 10ம் தேதி மகா ஸ்நபனம், சண்டிகேஸ்வரர் பூஜை, பைரவர் யாகம் நடைபெற உள்ளது.