சத்தியமங்கலம், ஜூலை 30: கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் இருந்து அன்னூர், புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி அம்மன் கோயில் வரை புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கென நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலைத் துறை, வருவாய் துறை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தினால் விவசாய விளைநிலங்கள் மற்றும் வீடுகளை இழக்க நேரிடும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் புறவழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நடராஜ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஈசன் முருகசாமி, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். புதிதாக புறவழிச் சாலை அமைப்பதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள கோவை-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை தேவையான இடங்களில் அகலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.