ஈரோடு, ஜூலை 30: ஈரோடு மாவட்டம் பி.பெ.அக்ரஹாரத்தைச் சார்ந்த முகமது நாசர் அலி மற்றும் அசோகபுரத்தை சார்ந்த சுயம்புலிங்கமுத்து ஆகிய இருவரும் மளிகைக்கடை நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த 2024ம் ஆண்டு இறந்துவிட்டனர். இவர்கள் இருவரும் அரசின் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருந்தனர். இதனால் அவரது வாரிசுதாரர்களான முகமது நாசரின் மனைவி ஜீலைகா மஸ்னூனா மற்றும் சுயம்புலிங்கமுத்துவின் மனைவி ஐஸ்வர்யா ஆகியோருக்கு நிவாரண தொகை தலா ரூ.3 லட்சம் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
இதையடுத்து, ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகத்தில், காசோலை வழங்கும் விழா நடந்தது. வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமையில், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்து இருவருக்கும் காசோலைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட துணை தலைவர் நெல்லை ராஜா அருள் சேவியர், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் சாதிக் பாட்சா, மாநகரப் பொருளாளர் கமலஹாசன், பி.பெ.அக்ரஹாரம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள், அசோகபுரம் அனைத்து வணிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.