ஈரோடு, ஆக.1: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் தலைமை வகித்தார். துணை ஆணையர் தனலட்சுமி, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன், தலைமை பொறியாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்துக்கொண்டனர்.
அப்போது, மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, திங்கள்கிழமையில் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆணையர் அர்பித் ஜெயின் கேட்டறிந்தார். பின்னர், பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் தினசரி சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆணையர் அர்பித் ஜெயின் உத்தரவிட்டார்.