ஈரோடு, ஜூலை 29: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வெண்டி பாளையத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில், தினசரி சேகரிக்கப்படும் குப்பை, வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. மலை போல் காணப்படும் அந்த குப்பைக்கிடங்கில், அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவதாலும், இதனால் சுற்று வட்டார பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாலும் அக்கிடங்கை வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து கவுன்சிலர்களும் தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரிந்த இந்த தீ விபத்தின் காரணமாக, அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.
இதனையடுத்து, கிடங்கில் பணிபுரியும் மாநகராட்சி ஊழியர்கள் ஈரோடு தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: வெண்டிபாளையத்தில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தால், வெண்டிபாளையம், மூலகவுண்டம்பாளையம், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.
இந்த குப்பை கிடங்கில் இருந்து அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், இதனை வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் என பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீ விபத்தின் காரணமாக வெளியேறும் புகையால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பெரியவர்கள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இனிமேலாவது அலட்சியம் காட்டாமல் வெண்டிபாளையம் குப்பை கிடங்கை வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.