கோபி, ஆக. 4: கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அணையாகும். இங்கு ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.
இதனால் கொடிவேரி அணை பகுதியில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அணையின் நீர்மட்டம் 102 அடி வரை தேக்க முடியும் என்பதால் அணையில் இருந்து உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் கொடிவேரி அணையில் குறைந்த அளவே தண்ணீர் சென்றது. நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொடிவேரி அணை திறக்கப்படும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை காரணமாக அணை நீர்மட்டம் 102 அடி உயரத்தை எட்ட தொடங்கியது.
இதனால் அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால், நேற்று கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. வழக்கமாக ஆடிப்பெருக்கு பண்டிகையின் போது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கொடிவேரி அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் கொடிவேரி அணைக்கு வருகை தந்தனர்.
ஆனால், அணை மூடப்பட்டு அணையின் முன்புறத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்ததால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணை அருகே உள்ள பாலத்தின் மீது நின்று அணையின் அழகை ரசித்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.