ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி ஆகிய இரண்டு ஆறுகள் ஓடுவதால் மற்ற மாவட்டங்களை காட்டிலும் ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா என்பது கூடுதல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாய பெருமக்கள் ஆடிப்பட்ட விதைப்பிற்கு முன்பாக கூடுதுறையில் புனித நீராடி காவிரி அம்மனை வழிபட்ட பின் தங்களது விலை நிலங்களில் விதைப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இதே போல் புதுமண தம்பதிகள் கூடுதுறையில் நீராடிய பின் அங்குள்ள அரசமர விநாயகரை வழிபட்டு வாழை இலையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பூ, காதோலை, கருகமணி வைத்து படையலிட்டு சூரியனையும், காவிரி தாயையும் வழிபடுவார்கள். இதே போல் சுமங்கலி பெண்கள் புது தாலிக் கயிற்றினை அணிந்து கொள்வார்கள். பொதுமக்களின் கூட்டம் பொழுதுபோக்கு இடங்களில் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் ஆடிப்பெருக்கு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.