சத்தியமங்கலம்,ஜூலை 26: பவானிசாகர் அணையில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, இந்தியா சுதந்திரம் பெற்ற பின் முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில் கட்டப்பட்டதாகும்.1948ம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கி, 1955ம் ஆண்டு பணிகள் முடிந்து நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது.ரூ.10.50 கோடி செலவில் கட்டப்பட்ட பவானிசாகர் அணை தெற்கு ஆசியாவின் 2வது பெரிய மண் அணையாகும். பவானிசாகர் அணையின் கரையின் நீளம் 9 கி.மீ தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணையின் கட்டுமானப் பணிக்காக வெளிநாட்டில் இருந்து நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து செயல்படுத்தப்படும் கீழ்பவானி வாய்க்கால் பாசன திட்டத்தின் கீழ் ஈரோடு,திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், பவானி ஆற்றின் வழியாக கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் அரக்கன் கோட்டை வாய்க்கால்களிலும்,பவானியில் உள்ள காலிங்கராயன் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்தின் மூலம் என மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த அணை கட்டப்பட்ட பின் கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிகளில் உள்ள புன்செய் நிலங்கள் நன்செய் நிலங்களாக மாறியதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டதோடு லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது. அணை கட்டி முடிக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆன நிலையில் தமிழக அரசின் பொதுப்பணி துறையின் மூலம் பவானிசாகர் அணையில் அவ்வப்போது பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். அதன்படி தற்போது நீர்வள ஆதாரத்துறை சார்பில் பவானிசாகர் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணி மேற்கொள்ள (டிரிப் 2) திட்டத்தின் கீழ் ரூ.19.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது பவானிசாகர் அணையில் புனரமைப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.