ஈரோடு,நவ.28: ஈரோட்டில் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில், காப்பகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துவரும் நிலையில்,பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில், உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.
அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 500 மருத்துவர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளில் 500 பேருக்கு நாய்களைப் பிடிப்பதற்கான பயிற்சி வழங்குதல், தமிழ்நாடு முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்குதல்,மாவட்ட அளவில் நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு மற்றும் வெறிநோய் தடுப்பூசி பணிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ள கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தல், அதிகரித்துவரும் நாய்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இனப்பெருக்கத்தடை அறுவை சிகிச்சை பணிகளை விரைந்து மேற்கொள்ள கூடுதலாக நாய் பிடி வாகனங்களை கொள்முதல் செய்தல் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, பொது இடங்களில் சுற்றித்திரிதல், கைவிடப்பட்ட,நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களுக்கு 72 காப்பகங்கள் அமைக்கப்படும் என்றும் காப்பகங்கள் அமைப்பதற்கான இடம் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில், ஈரோடு மாநகராட்சியில் பொது இடங்களில் சுற்றித்திரிதல், கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களுக்கு, காப்பகம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் அதிக நடமாட்டம் இருக்கும் பகுதிகளான மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து,காப்பகத்தில் வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அரசின் அறிவுறுத்தலின்பேரில்,கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களும் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட உள்ளது.
இதனால், மாநகராட்சியில் காப்பகம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அதாவது, காப்பகம் அமைப்பற்கான இடம் தேர்வு செய்யும் பணியில், சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நாட்களில் இடம் தேர்வு செய்யப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

