ஈரோடு, அக். 28: பருவநிலை மாற்றம் காரணமாக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருமல், சளி, காய்ச்சல், உடல் வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக, மாவட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் வலி, சோர்வு, சளி, இருமல், காய்ச்சல், தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருகின்றனர்.
இதன் காரணமாக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையிலும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நேற்று வழக்கத்தை விட அதிகளவில் குவிந்த பொதுமக்கள், மருத்துவர்களிடம் தங்களை பரிசோதித்து, மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சென்றனர்.
இதேபோன்று, பெருந்துறை, கொடுமுடி, பவானி, அந்தியூர், கோபி, சத்தி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் நீண்டநேரம் காத்திருந்து உரிய சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
