ஈரோடு, செப்.24: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் ராக்கிமுத்து, செந்தில்நாதன், கௌரிசங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் விளக்கவுரையாற்றினார்.
இதில், பிஎப்ஆர்டீஏ ஓய்வூதிய நிதி ஆணையத்தை களைத்திட வேண்டும். என்பிஎஸ் மற்றும் யூபிஎஸ் திட்டத்தில் செலுத்தப்பட்ட தொகைகளை அந்தந்த மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து சந்தாதாரர்களையும் இ.பி.எஸ் 95 கீழ் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
8வது ஊதிய குழுவை உடன் அமைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது, கார்ப்பரேட் நிறுவனங்களாக்குவது மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். ஊதியக்குழு நிலுவைகள் உள்ளிட்ட நிலுவையிலுள்ள அகவிலைப்படி தொகைகள் மற்றும் பறிக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை தொகைகளை வழங்க வேண்டும்.