சத்தியமங்கலம், செப்.23: புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் காவிலிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் காவிலிபாளையம் பகுதியில் கன மழை பெய்தது. இந்த நிலையில் காவிலிபாளையம் - நம்பியூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் மழைக்கு இடிந்து விழுந்தது.
இதன் காரணமாக தற்போது பள்ளிக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. காவிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பல ஆண்டுகள் பழமையான கட்டிடம். இதனால், வலுவிழந்த நிலையில் உள்ளதால் இடிந்து விழுந்துள்ளதாகவும், எனவே அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதியதாக சுற்றுச்சுவர் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.