ஈரோடு, செப்.23: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கட்டபொம்மன் வீதி, காமராஜர் வீதிகளில் மழைநீர் புகுந்த வீடுகளை, மாவட்ட கலெக்டர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால், மாநகரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக, கொல்லம்பாளையம் கட்டப்பொம்மன் வீதி மற்றும் காமராஜர் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனையடுத்து, தாசில்தார் முத்துகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில், வீடுகளில் தேங்கியிருந்த மழைநீரை, வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இந்நிலையில், கட்டப்பொம்மன் வீதி மற்றும் காமராஜர் வீதியில், கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை, மாவட்ட கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை பார்வையிட்டு, அவற்றில் இருந்த அடைப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், துணை ஆணையர் தனலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.