ஈரோடு, செப்.23: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நடப்பாண்டு புரட்டாசி தேர் திருவிழா, வரும் 26ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்குகிறது.
ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும்.
அந்த வகையில், நடப்பாண்டிற்கான தேர்த்திருவிழா வரும் 26ம் தேதி, கிராம சாந்தியுடன் துவங்குகிறது. 27ம் தேதி இரவு அன்னபட்சி வாகனம், 28ம் தேதி சிம்ம வாகனம், 29ம் தேதி அனுமந்த வாகனம், 30ம் தேதி கருட சேவை, அக்.,1ம் தேதி யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 2ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 3ம் தேதி காலை, 9.15 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.
அப்போது, கோயிலில் இருந்து தொடங்கும் தேரோட்டம் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, பெரிய மாரியம்மன் கோவில், காந்திஜிவீதி வழியாக சென்று மீண்டும் கோயிலில் நிலை சேர்கிறது. 4ம் தேதி குதிரை வாகனம், 5ம் தேதி சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 6ம் தேதி தீர்த்தவாரி, கொடியிறக்கம், ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுதலுடன் நிறைவு பெறுகிறது.