Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொடுமணல் அகழாய்வு பகுதியில் கலெக்டர் ஆய்வு

ஈரோடு, ஆக.18: கொடுமணல் அகழாய்வு பகுதியில் கற்பதுக்கைகள், நெடுநிலை நடுகற்கள், கற்குவைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் அமைந்துள்ளது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் கொடுமணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி கி.மு 4லிருந்து 5ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. கொடுமணலில் மக்கள் வாழ்ந்ததற்கான வாழ்வியல் இடத்தின் எச்சங்களும், இறந்தவர்களை புதைக்க பயன்படுத்தும் ஈமக்காட்டு பகுதியின் எச்சங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அதிகளவில் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் இங்கு கிடைக்கப்பெறுகின்றன. பானையோட்டு கீறல்களிலிருந்து தமிழ் பிராமி எழுத்து வளர்ச்சிக்கான ஆதாரங்கள் உள்ளன. கொடுமணல் அகழாய்வு பகுதியில் நொய்யல் ஆற்றின் கரையில் 7 இரும்பு உருக்கு உலை கலன்களும், அதிகளவில் இரும்பு உற்பத்தி செய்யப்பட்டு இரும்பு தயாரிப்பின் முக்கிய இடமாக திகழ்ந்துள்ளது.

குவார்ட்ஸ் என்று அறியப்படும் படிக கல்லினால் ஆன மணிகள், அப்பகுதியில் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன. செம்பழுப்பு நிறப்பூச்சு கொண்ட மட்கலன்கள், தமிழ் பிராமி பொறிப்பு பெற்ற மட்பாண்டச் சிதறல்கள், சங்கினால் தயாரிக்கப்பட்ட பல்வேறு விதமான கலைப்பொருட்கள், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நெடுநிலை நடுகற்கள், கற்குவைகள், முதுமக்கள் தாழிகள் போன்ற தொல்லியல் எச்சங்கள் இங்கு கண்டறியப்பட்டு முக்கிய அகழாய்வு தளமாக அறியப்படுகிறது.