ஈரோடு, அக். 12: ஈரோடு மாவட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வினை 32 மையங்களில் 9,963 மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் விதமாக பிளஸ் 1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நடப்பாண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில், ஈரோட்டில் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விவிசிஆர் செங்குந்தர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்து கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என மாவட்டத்தில் மொத்தம் 32 மையங்களில் தேர்வு நடந்தது. இத்தேர்வினை ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 10,356 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
இதில், 393 பேர் ஆப்சென்ட் ஆகி, 9,963 மாணவ-மாணவிகள் தேர்வினை எழுதினர். தேர்வானது, ஒ.எம்.ஆர். விடைத்தாள் முறையில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.இந்த தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும் 1,500 மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.1,500 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.