ஈரோடு, டிச.11: ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கினை, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2026ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று (11ம் தேதி) முதல் ஒரு மாத காலத்திற்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள், பெங்களூரை சேர்ந்த பாரத் எலக்ரானிக்ஸ் லிமிடெட் மென் நிறுவன பொறியாளர்களால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட உள்ளன.இதனையொட்டி, முதல்நிலை சரிபார்ப்பு பணிக்கு முன்னேற்பாடாக, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கு, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமி முன்னிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில் 3,582 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3627 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5777 வாக்களிப்பு இயந்திரங்களுக்கு முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


