பவானி, நவ.11: அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம் கோவிலூரை சேர்ந்தவர் சித்தமலை மகன் முருகன் (52). அதே பகுதியைச் சேர்ந்தவர் அரியா கவுண்டர் மகன் தங்கராசு (38). இருவருக்கும் மது வாங்கி வருவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2.8.2020ம் தேதி தங்கராசு தனது மாமா சின்னசாமி என்பவர் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த முருகன் தூங்கிக் கொண்டிருந்த தங்கராசுவை கொலை செய்யும் நோக்கில் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில், தங்கராசுவிற்கு இடுப்பு, வலது கை உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. இதில், அலறித்துடித்த தங்கராசு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு, பவானி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இதில், முருகனை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதில், தீக்காயமடைந்த தங்கராசுவுக்கு ரூ.8 ஆயிரம் நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டது.
+
Advertisement

