ஈரோடு, டிச. 6: ஈரோட்டில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில், காய்கறி கடை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கொல்லம்பாளையம், கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே ஐஓபி வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 2ம் தேதி நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் அந்த ஏடிஎம் மையத்தில் நுழைந்து, இயந்திரத்தை உடைத்து திறக்க முயன்றார்.
அப்போது அலாரம் ஒலித்ததால், வங்கி ஊழியர் ஒருவர் உடனடியாக அங்கு விரைந்தார். அதற்குள், கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வங்கி நிர்வாகத்தினர் அளித்த புகாரின்பேரில் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தூத்துக்குடியை சேர்ந்த துரைபாண்டி மகன் முருகேசன் (28) என்பதும், இவர், ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள காய்கறி கடையில் தொழிலாளியாக வேலைசெய்து வருவதும் தெரியவந்தது.

