ஈரோடு,செப்.2: வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பவானி தாலுகா, புன்னம் கிராமம், பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் ஊரில் புன்னத்திலிருந்து ஆப்பக்கூடல் செல்லும் சாலையில் பழைய சரவணா தியேட்டர் எதிர்ப்புறம் மேற்கு திசையில்,செட்டிகுட்டை வரை சுமார் ஒன்றரை கி.மீ நீளமும், பத்தடி அகலமும் கொண்ட பாதையை கடந்த பல தலைமுறைகளாக விவசாயம் செய்வதற்காகவும் அங்குள்ள கருப்பசாமி கோயிலுக்கு சென்று வரவும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்தப் பாதையை இதற்கு முன்பாக அரசு ரீ-சர்வே செய்தபோது, அரசு பொது பாதை என அறிவிக்காமல் விட்டுவிட்டது. அதனைத் தொடர்ந்து அதை பொது பாதையாக அறிவிக்க கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்த பாதையை அரசு பொது பாதையாக அறிவிக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குத்தியாலத்தூர் ஊராட்சி அசகித்திக்கோம்பை பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இருந்து கானக்குந்தூர்,ஒசப்பாளையம் தார்சாலை வரை 16 அடி அகலத்துக்கு நடைபாதை விடப்பட்டிருந்தது. இதன் மூலமாகவே எங்கள் பகுதிக்கு நாங்கள் சென்று வந்தோம். இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாதையை ஆக்கிரமித்துள்ளனர்.அதனால் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று வருவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் மனு அளித்திருந்தோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்களுக்கு வழித்தடம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.