பூந்தமல்லி: கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானிய மார்க்கெட் பகுதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டதால், பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி சமீபத்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். நடைபாதையை ஆக்கிரமித்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அங்காடி நிர்வாகம் தரப்பில் ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதை மீறி நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அங்காடி நிர்வாகம் மூலம் தொடர்ந்து ஒருவாரமாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வருகின்றனர். இதுவரை ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.