Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லை மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கீடு பணி

நெல்லை, ஜூலை 23: நெல்லை மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கீடு பணியை மேற்கொள்ள தகுதியுடைய நிறுவனத்தினர் வருகிற 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கீடு பணி 2024ம் ஆண்டு ராபி பருவம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கணக்கீட்டின்போது பயிர் சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பாசன முறை உள்ளிட்ட விவசாயம் சார்ந்த விவரங்களை புகைப்படத்துடன், செயலி மூலம் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.மேலும், ஆண்டிற்கு மூன்று முறையாக காரீப், ராபி மற்றும் கோடைப் பருவங்களில் இந்த மின்னணு பயிர் கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் நடப்பாண்டில் 2025-26 இந்த மின்னணு பயிர் கணக்கீடு பணி ஒப்பந்த பணியாளர் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஒப்பந்த பணியாளர் நிறுவனம் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படும். விருப்பமுள்ள நிறுவனங்கள் விரிவான விவரங்களுடன் கலந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு வேளாண்மை பட்டதாரி அல்லது பட்டய வேளாண்மை படித்தவர் அல்லது இதர பட்டப்படிப்பு படித்தவர்கள், இணையதள ஆண்ட்ராய்டு செயலியை உபயோகிக்கத் தெரிந்தவர்களாக உள்ளவர்கள் இக்கணக்கீட்டு பணியினை மேற்கொள்ள தகுதியுடையவர்கள். ஒப்பந்த பணியாளர் நிறுவனம் மேலே குறிப்பிட்ட தகுதியின் அடிப்படையில் அந்தந்த கிராமங்களிலுள்ள படித்த இளைஞர்களை பணியாளர்களாக தேர்வு செய்ய வேண்டும்.

நெல்லை மாவட்டத்திலுள்ள 335 கிராமங்களில் மின்னணு பயிர் கணக்கீடு பணி மேற்கொள்ள உள்ளது. இதிலுள்ள சர்வே எண்களை பதிவு மேற்கொள்வதன் அடிப்படையில் ஒரு சர்வே எண்ணுக்கு 2 சதவீதம் சேவை வரி உள்பட ரூ.20 வழங்கப்படும். நெல்லை கலெக்டர் தலைமையிலான குழு ஒப்பந்த பணியாளர் நிறுவனத்தை தேர்வு செய்யும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவன பணியாளர்கள் அடுத்த மாதம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியை தொடங்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவு தபாலில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

வருகிற 25ம் தேதி கலெக்டர் தலைமையிலான தேர்வுக்குழு ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் 335 வருவாய் கிராமங்களுக்கு ஒரு நபர் வீதம் 335 பணியாளர்களை தேர்வு செய்து பட்டியல் தர வேண்டும். இந்தப் பணியை எவ்வித தொய்வும் இன்றி உரிய பயிர் பருவ காலத்தில் செய்து முடித்துக் கொடுக்க வேண்டும் இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.