மானூர்,ஜூலை 19: மானூர் அருகே முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மானூர் அருகேயுள்ள தென்கலத்தைச் சேர்ந்தவர் அப்துல் அஜிஸ் (52). இவரது மனைவி செய்யது அலி பாத்திமா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. அப்துல் அஜிஸ் குடும்பத்தை விட்டு பிரிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக தனியாக வசித்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு ஆண்டு காலமாக மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பஜாரில் உள்ள டீ கடையில் டீ குடித்து விட்டு சென்றவர் நேற்று காலை வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
அதே ஊரிலுள்ள அவரது சகோதரர் காதர்மைதீன் (70) என்பவர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் அப்துல் அஜிஸ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்துவந்த மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


