Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வெளிநாடு வேலைக்கு செல்லக்கூடாது

நாமக்கல், ஜூலை 23: நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வெளிநாடு செல்லக்கூடாது என பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பாலான இளைஞர்கள் படிக்கும்போதே, பாஸ்போர்ட் எடுக்க தொடங்கி விடுகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து லண்டன், துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு தேடி, ஆண்டுதோறும் அதிகமான இளைஞர்கள் சென்று வருகின்றனர். வெளிநாடு வேலை மோகம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

இதனால், பல்வேறு இடங்களில் கடன் வாங்கியும், சொத்துக்களை அடமானம் வைத்தும், வெளிநாடு வேலைக்கு பலர் சென்று வருகின்றனர். அப்படி செல்பவர்களில் சிலர், அங்கு சரியான வேலை கிடைக்காமல் நாடு திரும்பி விடுகின்றனர். மேலும், போலி முகவர்கள் மூலம் வெளிநாடு வேலை வாங்கித் தருவதாக கூறி, ஏமாற்றி விட்டதாக புகார்களும் காவல்நிலையங்களில் அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி கூறியதாவது: வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் (https://emigrate.gov.in) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில், எந்த முதலாளியிடம் வேலை செய்ய போகிறீர்கள் போன்ற தகவல்களை முன்னதாகவே உறுதி செய்து கொள்ளவேண்டும். வேலைக்கான ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்.

வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம்பெறுகின்றன. வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பல நாடுகளில் வேலைக்கு செல்லும் நபர் நாடு திரும்புவதற்கு அனுமதி பெறுவது அவசியமாகும்.

ஒப்பந்த காலத்தில் வேலைக்கு சென்ற நிறுவனம், முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்திற்கோ, முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது. இதை வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம், வெளிநாடு வேலைக்கு செல்ல பயணிக்கக் கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது, அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும். இது கைது, அபராதம் அல்லது சிறை தண்டனைக்கே கொண்டு செல்லும். எனவே, இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் கட்டணமில்லா உதவி மையத்தினை தொடர்பு கொள்ளவேண்டும்.

இந்தியாவிலிருந்து அழைப்புக்கு: 1800 309 3793, வெளிநாடுகளிலிருந்து: 0 80 6900 9900 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி:nrtchennai@gmail.com / nrtchennai@tn.gov.in. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை தேடுபவர்கள், குறுக்கு வழிகளை தவிர்த்து, அரசு அமைத்துள்ள சட்டப்பூர்வமான வழியில் செல்லும் போதுதான் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.