தஞ்சாவூர்: கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கை மல்யுத்த போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் என்ற மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனையை தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் வயது 15. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல் ஒரத்தநாடு தாலுக்கா ஒக்கநாடு கீழையூர் பகுதியை சேர்ந்தவர் ஞானபாரதி (21). இவர், கல்லூரியில் முதுநிலை படிப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஜூன் 28 முதல் ஜூலை 2 வரை கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான பாரா கை மல்யுத்தம் போட்டியில் பங்கு பெற்று 65 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டனர்.
அதில் லட்சுமணன், வலதுகைப்பிரிவில் முதலிடத்திலும், இடதுகைப் பிரிவில் 2ம் இடத்திலும் வெற்றி பெற்று ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அதேபோல் ஞானபாரதி வலது கை பிரிவில் முதலிடமும், இடது கை பிரிவில் முதலிடம் பெற்று இரண்டு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர்கள் இருவரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள யூத் ஏசியன் போட்டிகளில் ஒன்றான பாரா கைமல்யுத்த போட்டியில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல் செப்டம்பர் மாதம் 12 முதல் 18ஆம் தேதி பல்கொரியாவில் நடைபெறும் சர்வதேச அளவிலான கை மல்யுத்த போட்டியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் தேசிய அளவில் வெற்றி பெற்று தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இரண்டு வீரர் வீராங்கனையும் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று நேரில் அழைத்து வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்தார்.
விளையாட்டு வீராங்கனைக்கு உடனடி உதவி
அப்போது வீராங்கனை ஞானபாரதி கை மல்யுத்த போட்டியில் பயிற்சி எடுப்பதற்கு டேபிள் தேவைப்படுகிறது. அதற்கு ரூ.10,000 மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டும் என கலெக்டர் பிரியங்கா பங்கஜமிடம் மனு கொடுத்தார். இந்த நிலையில் உடனே அதற்கான தொகை ரூ.10 ஆயிரத்தினை மாவட்ட ஆட்சியர் ஞானபாரதியிடம் வழங்கினார்.
அதேபோல் தனக்கு வீல் சேர் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் லட்சுமணன் கோரிக்கை மனு வழங்கினார். அதை பரிசளித்த தஞ்சை மாவட்ட கலெக்டர் உடனே பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார். தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் உடன் இருந்தார்.