பட்டிவீரன்பட்டி, அக்.7: பெரும்பாறையில் காட்டுமாடு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
பெரும்பாறை மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(70). மலைத் தோட்டங்களில் கூலிவேலை செய்து வந்தார். இவர் கடந்த 1ம் தேதி தனியாருக்குச் சொந்தமான மலைத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த காட்டுமாடு முருகேசனை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.