Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மண் மாதிரி எடுப்பது எப்படி? வேளாண் துறை விளக்கம்

பழநி, அக். 23: மண் பரிசோனைக்கு மண் எடுப்பது குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: மண் மாதிரி ஆய்வுக்கு அரை கிலோ மண் கொடுத்தால் போதும். அந்த அரை கிலோ மண் குறிப்பிட்ட நிலத்திற்கு சரியான மாதிரியாக இருந்தால் தான் நிலத்தின் உண்மையான வளம் தெரியும். மண் மாதிரி எடுக்கும் போது ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பும் மண் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு பயிர் அறுவடை செய்த பின்பும் இடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் உள்ள இடைபட்ட காலத்தில் தான் மண் மாதிரி எடுக்க வேண்டும். ஒரு நிலத்தின் மண் வெவ்வேறாக இருந்தால் தனித்தனியாக மாதிரி எடுக்க வேண்டும்.

எரு குவித்த இடம், வரப்பு வாய்க்கால் அருகில் மற்றும் மர நிழலில் மாதிரி எடுக்க கூடாது. ஒவ்வொரு வயலுக்கும் தனித்தனியே மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுக்கப்படும் இடத்திலுள்ள இலை, சருகு, புல், ஆகியவைகளை மேல் மண்ணை செதுக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். நெல், கேழ்வரகு போன்ற தானிய பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகளுக்கு அரை அடி ஆழமும், கரும்பு, பருத்தி, வாழை, காய்கறி பயிர்களுக்கு முக்கால் அடியும், தென்னைக்கு 3 அடியும், மா, சப்போட்டா போன்ற பழ மரங்களுக்கு 6 அடி ஆழத்தில் குழி வெட்டி அடுக்கு வாரியாக, தனித்தனியாக மண் மாதிரி எடுக்க வேண்டும்.

காலப்பயிர்களுக்கு ‘வி’ வடிவில் குழி வெட்ட வேண்டும். வெட்டிய குழியின் இரு ஓரங்களிலும் மண்வெட்டியின் தகட்டால் மேலிருந்து கீழ் வரை 1 சென்டி மீட்டர் கனத்திற்கு சீராக மண்னை சுரண்டி எடுத்து சேகரிக்க வேண்டும். இதுபோல் 1 ஏக்கருக்கு 10 முதல் 15 இடங்களில் மண் சேகரித்து அதை சுத்தமான பிளாஸ்டிக் பை அல்லது சாக்கில் கொட்டி, நன்றாக கலந்து கல், கண்ணாடி, வேர் தண்டுகளை அப்புறப்படுத்த வேண்டும். பின்பு, நான்கு சம போக முறையில் அரை கிலோ மண்ணை எடுத்து துணி பையில் போட்டு கட்ட வேண்டும்.

மண் மாதிரியுடன் விவசாயின் பெயர் மற்றும் அஞ்சல் முகவரி, கிராமத்தின் பெயர், நிலத்தின் பெயர், இறவை அல்லது மானாவாரி, பயிரிடப்பட்ட முன் பயிர் அடுத்து பயிரிடப் போகும் பயிர் பிரச்சனை இருப்பின் அதன் விபரங்களுடன் வேளாண்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.