Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் தரச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், அக். 23: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் தரச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என

மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் உயிர்ம சான்றளிப்பு மத்திய அரசின் தேசிய உயிர்ம வேளாண்மை செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உயிர்ம முறையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு மத்திய அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்டு தரச்சான்று வழங்கப்படுகிறது.

ரசாயனம் இல்லாமல் உயிர்ம முறையில் சாகுபடி செய்வதால் உற்பத்தி செய்யப்படும் உணவு பயிர்கள், காய்கறிகள், பழங்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதுடன், சுற்றுசூழல் மாசு குறைகிறது. மண்வளம் பாதுகாக்கப்படுவதுடன் குறைந்த செலவில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லாமல் பயிர்கள் வளர, உயிர்ம தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விளைவித்த பொருள்களுக்கு தமிழ்நாடு அரசு உயிர்ம சான்று வழங்கி வருகிறது. அவ்வாறு தரச்சான்று பெற விரும்பும் விவசாயிகள் தனி நபராகவோ, குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வணிக நிறுவனங்களும், கால்நடை வளர்ப்போர், தேனீ வளர்ப்பு, வனபொருள் சேகரிப்பு செய்பவரும் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு கட்டணமாக ஓராண்டுக்கு சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.2700, பிற விவசாயிகளுக்கு ரூ.3200, குழுவாக பதிவு செய்தால் ரூ.7200, வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400 செலுத்த வேண்டும். அங்கக சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் தங்களது பண்ணையின் பொது விபரகுறிப்பு, வரைபடம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம், நில ஆவணம் நகல், நிரந்தர கணக்கு எண் நகல், ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.