கொடைக்கானல், அக். 31: கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்குள் நாள் கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் பாபு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்ததாவது: பண்ணைக்காடு, தாண்டிக்குடி மலைக்கிராமங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றவில்லை. பழங்காலத்து நினைவு சின்னங்களான கற்திட்டைகள் சேதமடைந்து கிடக்கின்றன. கொடைக்கானலுக்கு வரக்கூடிய பிரதான மலைச்சாலைகளும், மேல்மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளும் சேதமடைந்து கிடக்கின்றன.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தியதற்கு முழுமையான நிவாரண தொகை வழங்கவில்லை. மேற்கண்ட பிரச்னைகளை உடனடியாக தீர்க்காவிட்டால் 1000க்கும் மேற்பட்ட மலைக்கிராம விவசாயிகளை ஒன்று திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம். இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் இலவச மின்சார இணைப்பு, பட்டா பெயர் மாற்றுதல், மானிய விவசாய பொருட்கள் கோரி மனுக்கள் அளித்தனர். இதில் வருவாய் வனம், நெடுஞ்சாலை, தோட்டக்கலை என பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர்.
 
  
  
  
   
