திண்டுக்கல், செப். 25: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்கள் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். டிஆர்ஓ ஜெயபாரதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம், முன்னாள் ராணுவத்தினர் மருத்துவமனை பொறுப்பு அலுவலர் ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னல் வீரமணி முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்கள் அவர்களை சார்ந்தோர்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 44 மனுக்கள் அளித்தனர். இதில் 9 பேருக்கு கல்வி உதவித்தொகை, 3 பேருக்கு திருமண மானியம் என மொத்தம் 12 பேருக்கு ரூ.2.67 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து போர் பணி ஊக்க மானிய தொகை வழங்கப்பட்ட 5 பெற்றோர்களுக்கு வெள்ளி பதக்கங்களை வழங்கினார்.