ஒட்டன்சத்திரம், அக். 16: ஒட்டன்சத்திரம் அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 6 பேருக்கு வனத்துறையினர் ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்தனர். ஒட்டன்சத்திரம் அருகே சிந்தலவாடம்பட்டி ஊராட்சி ராமபட்டினம் புதூர் பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்பகுதியில் ஒரு தோட்டத்தை கடந்து சென்ற போது சிலர் காட்டுப்பன்றியை வெட்டி இறைச்சியை பங்கிட்டு கொண்டிருந்ததை பார்த்தனர். உடனே வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் தோட்ட உரிமையாளர் மனோகரன் (60) மற்றும் சொக்கன் (47), முருகேசன் (60), பழனிச்சாமி (47), துரைசாமி (70), ராமசாமி (55) ஆகியோர் என்பதும், தோட்ட வேலியில் மின்சாரம் பாய்ச்சி காட்டுப்பன்றியை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவர்கள் மீது வனஉயிரின குற்றச்சாட்டு பதிவு செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.