திண்டுக்கல், ஆக. 15: திண்டுக்கல்லில் புத்தக திருவிழாவை முன்னிட்டு புகைப்பட போட்டி நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என போட்டி ஒருங்கிணைப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக துறை, இலக்கிய களம் இணைந்து நடத்தும் 12வது புத்தக திருவிழா ஆக.28ம் தேதி முதல் செப்.7ம் தேதி வரை அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு புதிய போட்டியாக புகைப்பட போட்டி மாவட்ட அளவில் அனைவரும் கலந்து கொள்ளும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லின் அடையாளங்கள் எனும் தலைப்பின் கீழ் நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் இருத்தல் வேண்டும். கேமரா மற்றும் மொபைல் என எதனை கொண்டும் எடுத்த புகைப்படமாக இருக்கலாம். ஆனால் புகைப்படத்தில் வேறு தொழில்நுட்ப திருத்தங்கள் செய்ய கூடாது.
தங்களை பற்றியும், புகைப்படத்தை பற்றியும் சிறு குறிப்போடு மென் நகலை dikbookfair2025@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.மேலும் புகைப்படத்தை 15 x 12 என்ற அளவில் பிரிண்ட் எடுத்து, திண்டுக்கல் இலக்கிய களம், வெங்கடாசலம் அரங்கம், பிச்சாண்டி பில்டிங்ஸ், தலைமை அஞ்சல் நிலையம் அருகில், திண்டுக்கல் 624 001 என்ற முகவரிக்கு ஆக.22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.