திண்டுக்கல், செப். 13: திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி சவேரியார் கோயில் தெருவை சேர்ந்தவர் அருள்சாமி (67). விவசாயி. இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் அதன்பின் திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள தோட்டத்து கிணற்றில் அவரது சடலம் மிதந்தது. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம், தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து கிணற்றில் மிதந்த அருள்சாமியின் உடலை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.