வத்தலக்குண்டு, நவ.11: வத்தலக்குண்டு அருகே தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியில் அமைந்துள்ள கிளை தபால் நிலையத்தில் பொதுமக்களின் சேமிப்பு பணம் ரூ.52 லட்சத்தை அங்கு பணியாற்றிய ஊழியர் முனியாண்டி என்பவர் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அஞ்சலக துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அஞ்சலக ஊழியர் முனியாண்டி மீது வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று, கிராம அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வத்தலகுண்டு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
+
Advertisement

