நத்தம், செப். 11: நத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட செல்லப்பநாயக்கன்பட்டி, ஊராளிபட்டி, சமுத்திரப்பட்டி, பூதகுடி, சிறுகுடி, புதுப்பட்டி, வேலம்பட்டி ஆகிய 6 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சரவணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி மையம், கிராம செழுமை மீட்பு திட்ட பயிற்சி, ஆதார் மையம், வேலம்பட்டியில் ரூ.5.85 லட்சத்தில் குளம் சீரமைப்பு, புதுப்பட்டியில் ரூ.45 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி, சமுத்திரப்பட்டியில் ரூ.22 லட்சத்தில் சாலை பணி, பூதகுடியில் ரூ.5 லட்சத்தில் நர்சரி கார்டன், சிறுகுடியில் ரூ.8 லட்சத்தில் மயான எரிவாயு தகனமேடை, ஊராளிபட்டியில் ரூ.16 லட்சத்தில் வேளாண்மை கிடங்கு, ரூ.3.10 லட்சத்தில் கலைஞர் கனவு இல்லம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரவீந்திரன், தாசில்தார் ஆறுமுகம் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி செயலர்கள் இருந்தனர்.