திண்டுக்கல், நவ. 7: திண்டுக்கல் அருகே அனுமந்த நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (46). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் வேல்குமார் என்பவருடன் வத்தலக்குண்டு சாலை கழுதை ரோடு பிரிவு அருகே நின்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பொன்மாந்துரை புதுப்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த திவாகர் (19) என்பவர் கீழே கிடந்த உடைந்த பீர்பாட்டிலை எடுத்து வேல்முருகன் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து அவரிடம் இருந்த ரூ.1,100 பணத்தை பறித்து சென்றார். இதுகுறித்து வேல்முருகன் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவாகரை கைது செய்தனர். திவாகர் மீது ஏற்கெனவே கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
