ஒட்டன்சத்திரம், நவ. 7: ஒட்டன்சத்திரம்- நாகனம்பட்டி பிரிவு பகுதியில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஒட்டன்சத்திரம் நகர் பகுதியிலிருந்து நாகனம்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கொல்லப்பட்டி, சங்குப்பிள்ளைபுதூர், கே.கே.நகர், சிக்கந்தர் நகர், தீயணைப்பு நிலையம் மற்றும் தாராபுரம் புறவழிச்சாலையை அடைய வாகனஓட்டிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வழியே வரும் வாகனங்கள் திண்டுக்கல்- பழநி தேசிய நெடுஞ்சாலையை அடையும் போது, சாலையை கவனிக்காமல் வேகமாக வந்து திரும்புவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையை கவனிக்காமல் வருவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனால் உயிர் பலி ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகனஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி ஒட்டன்சத்திரம் நகர் பகுதியிலிருந்து நாகனம்பட்டி பிரிவு செல்லும் பகுதியில் குவியாடி மற்றும் வேகத்தடை அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
