நத்தம், அக். 4: நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி ஆலோசனையின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர் சாதிக் தலைமையிலான குழுவினர் கோசுகுறிச்சி பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்குள்ள அபுதாகிர், அப்துல் காதர், சேட் முகமது ஆகியோரின் கடைகளிலிருந்து 1 கிலோ 700 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர். மேலும் இனி புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.