பழநி, ஆக. 1: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 90 நாட்களுக்கு ஒருமுறை தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெறுவது வழக்கம். இதன்படி மலைக்கோயிலில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமை வகித்தார். நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கோயிலில் பணிபுரியும் கோயில் ஊழியர்கள், செக்யூரிட்டிகள், சுகாதார பணியாளர்கள், சமையலர்களுக்கு பயிற்சிகள் அளித்தனர்.
காஸ் கசிவை தடுக்கும் முறை, தீ விபத்து காலங்களில் செயல்படும் விதம், மயக்கமடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை, உயரமான இடங்களில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டன. மேலும் மின்சார கசிவினால் ஏற்படும் தீ விபத்து, காஸ் கசிவினால் ஏற்படும் தீ விபத்து, எண்ணெய்களில் தீப்பிடித்தலின் வகைகள் மற்றும் அதனை அணைக்கும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.