தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்; 45.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை: ஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
ஒட்டன்சத்திரம், ஆக. 3: ஒட்டன்சத்திரத்தில் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த நபர்களுக்கு குடும்ப அட்டைகள், கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி பேசியதாவது: 1972ம் ஆண்டு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தை துவக்கி விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கினார். தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் துவங்கி 53 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை 2021ல் 44 லட்சத்து 94 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு இந்த ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசாயிகளிடம் இருந்து 45 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து 53 ஆண்டுகாலம் இல்லாத அளவிற்கு சாதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.
இதில் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் தங்கவேல், கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் சஞ்சய் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபு பாண்டியன், காமராஜ், தாஹிரா, ஆணையாளர் ஸ்வேதா, நகர் மன்ற தலைவர் திருமலைச்சாமி, துணை தலைவர் வெள்ளைச்சாமி, திமுக மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், தர்மராஜ், பொன்ராஜ், பாலு, தங்கம், செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மலர்விழிச்செல்வி மற்றும் துறை அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.